அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை: தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவசியம் என்று கருதப்படும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை: தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களையும் 3 வாரங்களுக்கு மூடி சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவை அறிவித்தவுடன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் ஐகோர்ட்டு நிர்வாகக்குழு அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.

பின்னர், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். எனவே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களின் பணி தொடர்பாக இதற்கு முன்பு வெளியிட்ட அனைத்து அறிவிக்கைகளும் ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்கிறோம். சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை வளாகத்துக்குள் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை யாரும் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படுகிறது. அவசர வழக்குகளின் விசாரணை தொடர்பான அனைத்து தொடர்புகளும் சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரின் இ.மெயில் ( re-g-r-g-e-nl@tn.nic.in & m.jot-h-i-r-a-m-an@aij.gov.in ) மற்றும் மதுரை ஐகோர்ட்டு கூடுதல் தலைமை பதிவாளர் இ-மெயில் ( tha-m-i-lj1968@gm-a-il.com ) மூலமே நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இந்த நீதிமன்றங்களில் அவசர வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதியின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். இதற்காக மாவட்ட நீதிபதிகளை வக்கீல்கள் தொடர்பு கொள்ளும் விதமாக அவர்களது இ-மெயில் முகவரியை அறிவிக்க வேண்டும்.

மேலும், அனைத்து நீதிமன்ற ஊழியர்களும் எந்நேரமும் அவசர பணிக்காக அழைக்கப்படலாம். அதற்கு வசதியாக அவர்கள் தங்களது வீடுகளில் இருக்க வேண்டும். செல்போனை அணைத்து வைக்கக்கூடாது. சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மிகவும் அவசியமான அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுக்கவேண்டும். அதுவும் அவசர வழக்குகள் எந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு எடுக்கப்படும். அல்லது காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படுமா? என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட வக்கீல்கள், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். எதிர்கால நிகழ்வுகளை கணிக்க முடியாத இந்த நிலையில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றங்கள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com