சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
Published on

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர்சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். அப்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதன்படி களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவை அற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

பிளாஸ்டிக், தெர்மாகோல்

மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

இயற்கை சாயங்கள்

மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com