உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும் - எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து

அ.தி.மு.க.ஆட்சியில் தொழிலாளர்கள் நலன்கள் அனைத்து வகைகளிலும் பாதுகாக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும் - எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மே தின" வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தின  திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஒயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும்; உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகிற்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் மே தின திருநாள் விளங்குகிறது.

உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. இதைத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்,"ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!" என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமைகளையும் உயர்த்தி உள்ளார்.

உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், தங்களது ஆட்சிக் காலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதேபோல், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியிலும் தொழிலாளர்களுடைய நலன்கள் அனைத்து வகைகளிலும் பாதுகாக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

உழைப்பில்தான் உடல் உறுதி பெறும், உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது நெஞ்சார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com