எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ஈபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை: கேபி முனுசாமி திட்டவட்டம்

எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ஈபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை: கேபி முனுசாமி திட்டவட்டம்
Published on

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம், ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல் அ.தி.மு.க. பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதற்காக அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கினர்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்டது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு விலக்கப்பட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு அது நின்றுபோனது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் விரைவில் பொதுதேர்தல் வரும் என்று பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பர்கூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் அணியைச்சேர்ந்த கேபி முனுசாமி, எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ஈபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தான் விரைவில் தேர்தல் என ஓபிஎஸ் கூறினார். இரு அணிகளும் சேரக்கூடாது என்று சீனிவாசன், ஜெயக்குமார் செயல்படுகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com