

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் முருகப்பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவார்கள்.
கோவில் வளாகம் வெறிச்சோடியது
ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கோவில் வளாகமும், கடற்கரையும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இருப்பினும் வைகாசி விசாக தினத்தையொட்டி நேற்று கோவிலில் வழக்கம்போல் ஆகம விதிப்படி சுவாமிக்கு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் வைகாசி விசாக தினத்தன்று பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழனியில்
பழனியில் முருகன் கோவிலில் 2-வது ஆண்டாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.