ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் மின்மோட்டார் படகுகள் இயக்கம் -சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் பைக்காராவில் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டு படகு இல்லம் மூடப்பட்டது.
ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் மின்மோட்டார் படகுகள் இயக்கம் -சுற்றுலா பயணிகள் வரவேற்பு
Published on

நீலகிரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள பைக்காரா படகு இல்லம் அடர்ந்த வனப்பகுதி நடுவில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் படகு சவாரி செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு பெட்ரோல் மோட்டார் படகுகள் மூலம் படகுகள் இயக்கப்படுவதால் காற்று, நீர் மாசுபடுவதாக கோவையை சேர்ந்தவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் பைக்காரா படகு இல்லத்தில் பெட்ரோல் மோட்டார் படகுகளை இயக்க தடை விதித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் பைக்காராவில் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டு படகு இல்லம் மூடப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் படகுகளில் பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய மின்மோட்டார்கள் பொருத்தி இயக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.21 லட்சம் மதிப்பிலான மின்மோட்டார் பொருத்தப்பட்ட 3 படகுகளின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 8 எச்.பி., 12 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு சத்தம் அதிக அளவில் இல்லாமல் படகுகள் இயக்கப்பட்டன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று படகு இல்லம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். மின்மோட்டார் படகுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அதிக சத்தம் இன்றி புகை மற்றும் மாசில்லாமல் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். அதிக வேகம் இல்லாமல் மெதுவாக செல்லும் படகு மூலம் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது புதிய அனுபவமாக இருந்ததால் வரவேற்பு தெரிவித்தனர். 30 படகுகள் இயங்கிய இடத்தில் தற்போது 3 மின்மோட்டார் படகுகளே இயக்கப்படுவதால், வரும் நாட்களில் கூடுதலாக மின்மோட்டார் படகுகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com