

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம்போல் சத்துணவு சாப்பிட்டனர். உணவுடன் மாணவர்களுக்கு முட்டையும் வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒருவர் பின் ஒருவராக உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலும், மற்ற மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்டு உடல்நலம் பாதித்த ஒரு மாணவி உள்பட 19 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கூறுகையில், பள்ளி மாணவர்கள் யாரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை. அனைவரும் சுய நினைவுடன் உள்ளனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பின்னர் தான் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் முழு கவனிப்பில் இருக்கின்றனர். பெற்றோர் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றனர்.