26 நாட்களுக்குப் பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொட்டும் மழை, பனிமூட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
26 நாட்களுக்குப் பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Published on: 

ஊட்டி,

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 72 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் பாறாங்கற் களும் உருண்டு விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரை 26 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன்னூர் மலை ரெயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளர் குமார் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொட்டும் மழை, பனிமூட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் வெடிவைத்து தகர்த்து அகற்றப்பட்டன. மண் மற்றும் மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. சேதமடைந்த ரெயில் தண்டவாளங்கள் மற்றும் பல் சக்கரம் பொருத்தப்பட்ட பினியன் பார்கள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததையடுத்து 26 நாட்களுக்கு பிறகு மேட் டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மலை ரெயிலில் பயணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்தனர்.

X