

ஊட்டி,
நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆரம்பி பிரிவு அருகில் அழகர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 25-ந் தேதி, 2 புலி குட்டிகள் தாயை பிரிந்து சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி வடக்கு வனச்சரகர் ராம்பிரகாஷ் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த, பிறந்து 5 மாதங்களே ஆன பெண் புலி குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
அந்த புலி குட்டிக்கு சென்னை வண்டலூரில் இருந்து கால்நடை டாக்டர் ஸ்ரீதர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் மற்றொரு புலி குட்டியை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த புலி குட்டியையும் மீட்டனர். அந்த புலி குட்டிக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் முதலில் பிடிக்கப்பட்ட புலி குட்டி சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்த புலி குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது. மற்றொரு புலி குட்டி சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.