ஊட்டி ரோஜா பூங்காவில் மலராத பூக்கள்: சுற்றுலா பயணிகள் கவலை

வழக்கமாக இந்த சீசனில் பூங்கா முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கி கண்கொள்ளா காட்சியாக காட்சியளிக்கும்.
ஊட்டி ரோஜா பூங்காவில் மலராத பூக்கள்: சுற்றுலா பயணிகள் கவலை
ரோஜா பூங்கா
Published on

ஊட்டி,

'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில், உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக அரசு ரோஜா பூங்கா திகழ்கிறது. விஜயநகரம் பகுதியில் உள்ள இந்த பூங்காவில், ஆயிரக்கணக்கான ரகங்களை சேர்ந்த ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஏமாற்றம்

தற்போது ஊட்டியில் இரண்டாவது சீசன் காலம் என்பதால், நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். ஆனால், இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மலர்கள் சரிவர பூக்கவில்லை

வழக்கமாக இந்த சீசனில் பூங்கா முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கி கண்கொள்ளா காட்சியாக காட்சியளிக்கும். ஆனால், தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் எதிர்பார்த்த அளவு மலர்கள் சரிவர பூக்கவில்லை. செடிகள் அனைத்தும் மலர்களின்றி வெறும் இலைகளுடன் காட்சியளிக்கின்றன. அங்குமிங்குமாக ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் பூத்துள்ளன.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீண்ட தூர பயணம் மேற்கொண்டு, ரோஜா மலர்களின் அழகை கண்டு ரசிக்க ஆவலோடு வரும் சுற்றுலா பயணிகள், பூக்கள் இல்லாத பூங்காவை கண்டு ஏமாற்றம் அடைந்து கவலையுடன் திரும்பி செல்கின்றனர்.

மழை பொய்த்ததே காரணம்

இந்த ஆண்டு உலகளாவிய காலநிலை மாற்றமான 'எல்நினோ' பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்து போனது தெரியவந்துள்ளது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, ரோஜா செடிகளுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com