ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து அந்த ஆலையை தமிழக அரசு கடந்த ஆண்டு பூட்டி சீல் வைத்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்தும், ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகும்படியும் உத்தரவிட்டது.

அதன்படி சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவித்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில், ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. தற்போது ஆலையை உடனே திறக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திறக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போது ஆலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அபாயகரமான கழிவு மேலாண்மையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், தொடர்ந்து மாசு ஏற்படுத்தியதால் தான் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த ஆலையால் 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடிநீர் மாசடைந்துள்ளது. ஆலையில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எந்தவொரு இடைக்கால உத்தரவும் இப்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 27-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com