1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
Published on

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவ-மாணவிகள் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை மீண்டும் தமிழக அரசு தள்ளி வைத்தது.

இதையடுத்து, 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 12-ந்தேதி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

ஆசிரியர்கள் வரவேற்றனர்

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவ- மாணவிகளை, அவர்களுடைய பெற்றோர் நேற்று பள்ளிக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழுப்பி புறப்பட வைத்தனர். சில மாணவ- மாணவிகள் விடுமுறை முடிந்த கவலையிலும், பலர் அடுத்த வகுப்புக்கு செல்லப்போகிறோம், நண்பர்களை மீண்டும் சந்திக்க போகிறோம் என்ற உற்சாகத்திலும் பள்ளிக்கு புறப்பட்டனர். குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர். முதன்முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகள் பள்ளிக்கு போகமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறி, அழுது அடம் பிடித்தனர்.

இதனால் பெற்றோர் வலுக்கட்டாயமாக குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டனர். சில மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுடன், மாணவிகள் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பேசியபடி பள்ளிக்கு சென்றனர். பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் பன்னீர் தெளித்து வரவேற்று பூ, இனிப்பு வழங்கினர்.

விலையில்லா பாடப்புத்தகங்கள்

பெரம்பலூரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் பூக்களால் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் சந்தனம் திலகமிட்டும், மலர் தூவியும், இனிப்பு கொடுத்து வரவேற்றனர். மாவட்டங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை சாப்பிட்ட பிறகு அந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com