

சென்னை,
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக ஈரான் மீது சர்வதேச சட்ட நெறிமுறைகளை மீறி ராணுவத் தாக்குதலை நடத்தின.
அமெரிக்காவின் அரசியல் பொருளாதார - ராணுவ அரசியல் மேலாதிக்க நோக்கமே இதற்குக் காரணம்.
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை தனது கட்டுப்பாட்டில் முழுமையாகக் கொண்டுவரும் நோக்குடன் தொடர்ந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையிலேயே ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்குடன் அமெரிக்கா செயல்பட்டது.
ஈரானின் எதிர்த்தாக்குதலால் கடும் பின்னடைவை, இழப்புகளை சந்தித்தது. அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளால், மேற்காசியாவில் பதட்ட நிலை நீடித்து வந்தது. ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. நட்பு நாடுகளுக்கு மட்டும் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதித்தது. இந்நிலையில் அமெரிக்கா தன்னுடைய போர்க்கப்பல்களை ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலை நிறுத்தி அப்பகுதியில் எந்த நாட்டினுடைய கப்பலும் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் போகக் கூடாது எனத் தடைவிதித்தது.
அமெரிக்காவின் அடாவடித்தனத்தை, மத்திய பாஜக அரசு எந்தவொரு கட்டத்திலும் கண்டிக்கவில்லை, கடுமையாக விமர்சித்து அறிக்கையும் வெளியிடவில்லை என்பது கவலையளிக்கும் போக்காகும்.
இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உடன்பாட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து இடப்படவில்லை. எனினும் அமெரிக்கா - ஈரான் உடன்பாடு எட்டப்படுவது உறுதியாகியுள்ளது.
அதனால், ஹார்முஸ் நீரிணை மீண்டும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இது வரவேற்பிற்குரியது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எனவே இந்திய அரசு அமெரிக்காவை வலியுறுத்தி அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்த வேண்டும். மேற்காசியாவில் நிரந்தர அமைதி திரும்ப உரிய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.