80 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி

80 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
80 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை

தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் தணிந்து 4000 என்ற எண்ணிக்கும் குறைவாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

அதன்படி தமிழகத்தில்கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அளவு குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகாலையிலேயே கோவில்களில் திரண்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர். சுமார் 2 மாதங்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல் மசூதிகளிலும் தொழுகை நடந்தது. கிறிஸ்தவ ஆலயங்கள் வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com