

சென்னை,
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9/5/2021 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சிறு, குறு தொழிற்நிறுவனங்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள், கால் டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய மாதாந்திர தவணை தொகையை கட்டுவதற்கும், காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார்.
அதனடிப்படையில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில் 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்த காலத்திற்கு வட்டி வசூல் ஏதும் வசூலிக்கப்பட கூடாது என்றும் தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமர் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், முதல்-அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.