

சென்னை,
வங்கிகளை இணைக்க கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த அகில இந்திய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளை இணைக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் உள்ள மோடி அரசு வங்கி துறைக்கு எதிராக பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள தேனா, விஜயா வங்கிகளை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். ஏற்கனவே ஸ்டேட் வங்கியுடன் 6 வங்கிகளை இணைத்தார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் சேவைகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் தற்போது 3 வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக மாற்ற நினைக்கிறார்கள்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி, ஸ்டேட் வங்கியுடன் மற்ற வங்கிகளை இணைத்ததன் மூலம் 6 ஆயிரத்து 950 கிளைகள் மூடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இணைப்பு என்றால் வங்கி கிளைகள் மூடப்படுவது தான்.
ஏற்கனவே 1,500 ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வங்கி சேவைக்காக எங்கே செல்வார்கள்?. வங்கி கிளைகள் மூடப்படுவதால் உபரியாக இருக்கும் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும்.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராடி வருகிறோம். அடுத்தகட்டமாக தலைமை கூட்டம் நடத்தப்பட்டு, மேலும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் உள்ள 80 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்தே இந்த போராட்டத்தை நடத்தினோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போராட்டம் காரணமாக சென்னையில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9 லட்சம் காசோலைகள் முடங்கின.
இவ்வாறு அவர் கூறினார்.