சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க மறுப்பதாக கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் கள் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினார்.
சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்குவதற்கு முன்னதாக தி.மு.க. கொறடா சக்கரபாணி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சென்று சபாநாயகர் ப.தனபாலை சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.

பின்னர், சட்டசபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அரசு செவி சாய்க்கவில்லை.

நாடு முழுவதும் கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களும் உள்ளது. அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்துவது மட்டுமே கொரோனா நோய் தடுப்புக்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்து கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக தெரியவில்லை.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கோவையில் 5 பேருக்கும், ஈரோட்டில் 7 பேருக் கும், அதேபோல், நெல்லை, மதுரை, வேலூர், பெருந்துறை ஆகிய இடங்களிலும் கொரோனா நோய் பாதிப்பு உள்ளதாக தெரிகிறது. நோய் வரும் முன்பே தனிமைப்படுத்திக் கொள்ளாத இத்தாலி நாட்டின் பாதிப்பையும், நோய் குறித்து முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆகவே, மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வரும் முன் காப்போம் நடவடிக்கை ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க. வின் இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் புறக்கணிப்பு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கரும் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com