பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
Published on

வாலாஜாபாத்,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 600-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசோ, மாநில அரசோ பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 600-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கிராம பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று தங்களின் வயலில் இறங்கி நெற்கதிர் வந்து அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களை கட்டி அணைத்து கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை கோஷங்களை எழுப்பினார்கள்.

கிராம மக்களின் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம், நெல்வாய், பரந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிராம மக்களின் போராட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களின் போராட்டத்தை மத்திய, மாநில, அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இனி கிராமத்தில் மாலை நேர போராட்டங்களை நடத்தபோவதில்லை. சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து, கோர்ட்டை நாட உள்ளோம். கோர்ட்டு தங்களை கைவிடாது என்ற நம்பிக்கை உள்ளது.

விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், நாடாளுமன்ற தேர்தலை கிராம மக்கள் அனைவரும் புறக்கணிக்க போகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com