தனியார் நிறுவனங்களுக்கு பத்திரப்பதிவு பணி ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு... தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

நவீன வசதிகளுடன் கூடிய இ-ஹப் சேவை மையங்கள் அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு பத்திரப்பதிவு பணி ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு... தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டம்!
Published on: 

சென்னை,

தனியார் நிறுவனங்கள் மூலம் பத்திரப் பதிவு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து. தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதனால் பல இடங்களில் பத்திரப் பதிவு பணியில் தொய்வு ஏற்பட்டது.

புதிய திட்டம்

பத்திரப்பதிவு செய்வதற்காக சார்-பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும். பத்திரப்பதிவில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், தமிழக பத்திரப்பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய இ-ஹப் சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் வழியாக பத்திரப்பதிவு செய்துகொள்ள முடியும்.

டிஜிட்டல் டோக்கன் வசதி. அதிவேக வை-பை உள்ளிட்ட நவீன வசதிகளும் இந்த மையங்களில் இடம்பெற உள்ளன. முதல்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 5 இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் மாதிரி பத்திரப்பதிவு மையங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டம்

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள், பத்திரம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வரும் வக்கீல்கள், பத்திர எழுத்தர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் கணினி ஆபரேட்டர்கள். பத்திர விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்திரப்பதிவு பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முகூர்த்த நாளான நேற்று ஏராளமானோர் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, 'ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது அதிக மோசடி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பத்திர எழுத்தர்கள் மூலம் இந்த பணிகளை செய்யும்போது மட்டுமே மோசடியை தடுக்க முடியும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

இ-ஹப் மையங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பெரும் தொகை தேவைப்படும். தனியார் நிறுவனங்களால் மட்டுமே இந்த மையத்தை நடத்த முடியும். இதனால் பல தலைமுறைகளாக பத்திரம் எழுதும் தொழிலில் ஈடுபட்டு வரும், பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள், பத்திர விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பத்திரம் தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சொத்துகளைப் பதிவு செய்ய வரும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தனியாரிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் வருவது அவசியம் என்றாலும், பல தலைமுறைகளாக இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பயன் கிடைப்பதுடன், ஏற்கனவே இந்த தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் அரசு தீர்வுகாண வேண்டும்' என்றார்.

X