

கடலூர்,
கடலூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு மற்றும் சித்திரப்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கடலில் இறங்கி வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் தியாகவள்ளி, நொச்சிக்காடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கடற்கரை கிராம மக்கள், சிப்காட் விரிவாக்கத்திற்கான அரசாணை 165-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று (சனிக்கிழமை) காலை வங்காள விரிகுடா கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு பிரம்மாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தி, திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு மக்கள் போராடினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, "அரசாணையைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்" என எச்சரித்தபடி எழும்பிய கடல் அலைகளுக்கு இடையே கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடற்கரைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கடலில் இறங்கியவர்களை பாதுகாப்பு கருதி உடனடியாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
"ஏற்கனவே இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபட்டு கொடிய நோய்கள் பரவி வருகின்றன. இப்போது மீண்டும் 1,100 ஏக்கருக்கும் அதிகமான வளமான விளைநிலங்களை சிப்காட் பூங்காவிற்காக அரசு கையகப்படுத்த முயல்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்களின் விவசாயமும், மீன்பிடி வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, நில எடுப்பு திட்டத்தை அரசு உடனடியாகவும் நிரந்தரமாகவும் கைவிட வேண்டும்" என்று கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.