ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஆட்கள் தேர்வு செய்ய எதிர்ப்பு

எதிர்காலத்தில் ரேஷன் கடைகளை தனியார் மயமாக்குவதற்கு இது வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஆட்கள் தேர்வு செய்ய எதிர்ப்பு
Published on: 

சென்னை,

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு மகளிர் சுயஉதவிக்கு ழுக்கள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரேஷன் கடைகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலும், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் அரிசி அட்டை, சர்க்கரை அட்டைகள், எந்த பொருளும் பெறாத அட்டைகள் என 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

விற்பனையாளர் பணி

இதில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆட்களைத் தற்காலிகமாகத் தேர்வு செய்ய கூட்டுறவுத் துறை பதிவாளரின் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதற்கு ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

தற்காலிகமாக ஆட்கள்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில். கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் கடந்த 31-8-2026-ந் தேதி நிலவரப்படி 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 எடையாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணியில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பொது வினியோக திட்ட பொருட்களை வழங்குவதில் சிர மம் ஏற்படுகிறது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (டி.ஆர்.பி.) மூலம் பணியாளர்களை தேர்வு செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதால் அதற்கு காலதாமதம் ஏற்படும். எனவே அதுவரை பொது வினியோக திட்டப்பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக ரேஷன் கடை வினியோகம் தொடர்பாகப் பயிற்சி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு காலியாக உள்ள நியாயவிலைக் கடைகளை தற்காலிகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விற்பனையாளர்கள், எடையாளர்

இதன்படி விற்பனையாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சியும், கட் டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குள் வசிப்பவராகவும், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கெனவே பணியில் இல்லாதவராகவும், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பணியாளர்களுக்கு நெருங்கிய உறவினராக இல்லாதவராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களில் விற்பனையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.7,500-ம், எடையாளர்களுக்கு மாதம் ரூ.6,600-ம் ஊதியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் சங்கம் எதிர்ப்பு

இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கூறுகையில், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இந்த நடைமுறை எதிர்காலத்தில் ரேஷன் கடைகளை தனியார் மயமாக்குவதற்கு வழிவகுக்கும்.

மேலும் இந்தப் பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதுடன், மிகவும் குறைவான ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பணியில் தேர்வு செய்யப்படுபவர்கள் முழுமையான பொறுப்புணர்வுடன் பணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொது வினியோக திட்டப் பணிகளில் முறைகேடுகள் ஏற்படவும் வழிவகுக்கும்.

இளைஞர்கள் காத்திருப்பு

படித்துவிட்டு வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் முறையாக அறிவிப்பு வெளியிட்டு ஓரிரு மாதங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும். எனவே மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக ஆட்களை தேர்வு செய்யும் முடிவை கைவிட்டு கூட்டுறவுத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

X