

தூத்துக்குடி,
கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரமும், பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலும் முற்றிலும் பாதிக்கப்படுவதாகக் கூறி, தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் மீனவர்கள் இன்று கடலுக்குள் படகுகளை நிறுத்தி தீவிர முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி கடற்கரை மற்றும் துறைமுக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி முல்லக்காடு பகுதியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான ஆலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும், கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களாலும் கடற்கரையையொட்டி பாரம்பரியமாக செய்யப்படும் 'கரைவலை' மீன்பிடித் தொழில் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதனால் கடல்வளம் மற்றும் மீன்வளமும் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடலில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காற்று குறைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றனர். அப்போது, தங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது மீன்பிடிப் படகுகளுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகப் பகுதியை முற்றுகையிட்டு கடலின் நடுவே திரண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பாரம்பரிய கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நன்னீராக்கும் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு தகுந்த வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் இந்த திடீர் கடலோரப் போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க கடலோரப் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.