ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? - எதுவும் நடக்கலாம் - கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? - எதுவும் நடக்கலாம் - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் பதில்
ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? - எதுவும் நடக்கலாம் - கு.ப.கிருஷ்ணன் பதில்
Published on

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்தது.

இந்த போட்டா போட்டி அறிவிப்பால் 'இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவானது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய 2 பேரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமாதான தூதுவர்கள் போன்று செயல்பட்டனர்.

அவர்கள், அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும். 'இரட்டை இலை' சின்னத்துக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்று தங்களது விருப்பத்தை 2 பேரிடம் தெரிவித்தனர்.

இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியில், 'இரட்டை இலை' சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், 'அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு கையெழுத்திட நான் தயார். 'இரட்டை இலை' சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தென்னரசுதான் வேட்பாளர் என்பதில் திட்டவட்டமாக இருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு என்று அக்கட்சியின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.

இந்த கடிதங்கள் மாவட்ட தலைவர்கள் மூலம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யாமல் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறி விட்டார்' என்று கண்டனத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஒப்புதல் கடிதங்களை சூட்கேஸ் பெட்டியில் வைத்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து சென்றனர். இந்த கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகி கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விலகியது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார்.

இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஓபிஎஸ்சை செங்கோட்டியன் பாராட்டியதற்கு நன்றி. இரட்டை இலை சின்னம் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம். பழனிசாமியை பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com