

தூத்துக்குடி,
சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பி.கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேசுகையில் தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் மற்றும் திரளான போலீஸார் இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் காலை நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போலீஸார் எம்.எல்.ஏ.விடம் கைது செய்ய வந்த குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரளான திமுகவினர் திரண்டனர். போலீஸார் அவரை கைது தங்களது வாகனத்தில் ஏற்றியதும், திமுகவினர் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு காவல்துறை வாகனங்களை மறித்து அமர்ந்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டு மார்க்கண்டேயன் எம்எல்ஏ செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனிடம் எஸ்பி அலுவலகத்தில் வைத்து 10 விசாரணை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்கு பின், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.