

கோவை,
கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் 1 ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருகிறார். ஆரம்ப காலத்தில் விறகு அடுப்பில் இட்லி சுட்டு விற்று வந்தார். பல ஆண்டுகளாகியும் இவர் 1 ரூபாய்க்கு மட்டுமே இட்லி விற்கிறார்.
கமலாத்தாள் பாட்டியின் சேவை பலரையும் கவர்ந்தது. பல்வேறு தரப்பினர் அவர் கடை நடத்தி, வசிப்பதற்கு உதவி செய்து வந்தனர். விறகு அடுப்பில் இருந்து கியாஸ் சிலிண்டர் மூலமாக கடந்த 10 ஆண்டாக இவர் இட்லி சமைத்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு கியாஸ் நிறுவனத்தினர் இலவசமாக கியாஸ் சிலிண்டர் வழங்கி வந்தனர்.
இந்த இலவச கியாஸ் சிலிண்டர் கடந்த 2 மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால், 1 ரூபாய்க்கு இட்லி செய்து தர முடியாமல் கமலாத்தாள் கஷ்டப்பட்டார். இது தொடர்பாக அவர் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், கியாஸ் சிலிண்டர் இலவசமாக தந்தார்கள். ஏன் நிறுத்தி விட்டார்கள் என தெரியவில்லை, எனக்கு மீண்டும் வழக்கம் போல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக தரவேண்டும் என மனு கொடுக்க வந்தேன் என்றார். இதையடுத்து அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்படி அவருக்கு தடையின்றி இலவச சிலிண்டர் வழங்க கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டு உள்ளார்.