தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் அன்புநிதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் பொதுநல வழக்கு தொடர்பான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக ரூ. 1,250 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தார்.

தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே ஆகும்.

ஆகவே தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை, அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணி காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல. மேலும் ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்.

எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்று குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளம் தொடங்கி, அதில் குடிமராமத்து பணி நடைபெறக்கூடிய இடம், பணியின் விவரம், கால அளவு, அதற்காக செலவழிக்கக் கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com