மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க மாற்று இடம் ஒதுக்க உத்தரவு: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சலுகை கிடையாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க மாற்று இடம் ஒதுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சலுகை கிடையாது என ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க மாற்று இடம் ஒதுக்க உத்தரவு: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சலுகை கிடையாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
Published on

ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்தவர் முத்து. பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகில் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த போது மறுத்து விட்டனர். மேலும், எனது பெட்டிக்கடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என கூறி அகற்றி விட்டனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆகிய எனக்கு தொடர்ந்து அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சலுகை கிடையாது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்ற காரணத்தால் கடை அகற்றப்பட்டிருந்தால் எந்த சலுகையும் கிடையாது. நடைபாதை கடையை அகற்றுவதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் இரக்கம் காட்ட முடியாது. அதேசமயத்தில், மனுதாரர் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக மனு செய்து மாற்று இடத்தில் கடை வைத்துக்கொள்ளலாம். பார்வையற்றவர் என்பதால், மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி மாற்று இடம் ஒதுக்கி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com