

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஐகோர்ட்டு மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. பொருத்துவது தொடர்பாக, மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்கள் தான், தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலந்தார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், "தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட பொருத்தப்பட வேண்டும். இதுவரை எத்தனை பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்?. சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதற்கு ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு? இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.