

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் இயந்திரங்களை ஈடுபடுத்தாமல், வெறும் கைகளால் குப்பைகளைத் தரம் பிரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அங்குள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை இயந்திரங்கள் மூலம் அகற்றி தரம் பிரிப்பதே வழக்கம். ஆனால், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், தூய்மைப் பணியாளர்களைக் கொண்டே வெறும் கைகளால் குப்பைகளைத் தரம் பிரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் குப்பைகளைக் கையாள்வது தங்களின் உடல்நலனைப் பாதிக்கும் எனக் கூறி, பேரூராட்சியின் இந்த உத்தரவுக்கு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை முதல் 103 தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து குப்பைக் கிடங்கு வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக திருப்புவனம் பகுதியில் இன்று குப்பை சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.