ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க அவசர சட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க அவசர சட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் மக்களால் விளையாடப்பட்டு வருகின்றன. இதற்கு பலர் அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி தோல்வி அடைகின்றனர். ஒரு கட்டத்தில் பணத்தை இழந்து மனவிரக்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர். சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது.

எனவே இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கு கடந்த ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்த சட்டத்தை போதிய ஷரத்துகள் இல்லை என்று கூறி கோர்ட்டு ரத்து செய்துவிட்டது.

எனவே வலுவான சட்டமாக அதை உருவாக்கும் நோக்கத்தில் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது.

ஆலோசனை கூட்டம்

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தடை செய்வது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள், மாணவர்கள், இளம்தலைமுறையினரிடம் அரசு கேட்டுள்ளது. அதோடு, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை அரசிடம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. எனவே இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், உள்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com