

சென்னை,
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் முறையான கால்நடை மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை கிடைக்காததால் நெருப்புக்கோழி ஒன்று உயிரிழந்துள்ளது.
சென்னை கிண்டியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் நெருப்புக்கோழி ஒன்று, ஒரு வார காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று முறையான கால்நடை மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை கிடைக்காததால் அந்த நெருப்புக்கோழி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் வனத்துறை மற்றும் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைப்படி, பூங்காவில் உள்ள ஏதேனும் ஒரு விலங்கு அல்லது பறவை இறந்தால், உடனடியாக உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், கிண்டி பூங்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிரந்தர கால்நடை மருத்துவர் யாரும் பணியில் இல்லை. இதன் காரணமாக, அந்த நெருப்புக்கோழியின் உடல் இன்னும் உடற்கூறாய்வு செய்யப்படாமல், பூங்காவின் குளிரூட்டப்பட்ட அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இறந்த நெருப்புக்கோழியின் உடல் முழுமையாக பெட்டிக்குள் கொள்ளாததால், வனத்துறை அதிகாரி ஒருவர் அதன் கால்களை உடைத்து, கட்டாயப்படுத்தி குளிரூட்டப்பட்ட அறையில் அடைத்துள்ளார். பூங்காவில் தற்காலிகமாக பணியாற்றி வந்த கால்நடை மருத்துவர், மாற்று மருத்துவர் நியமிக்கப்படும் முன்னே பணியில் இருந்து நின்றுவிட்டதே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று சென்னை வனவிலங்கு காப்பாளர் குலால் யோகேஷ் விலாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த அவசர நிலையை சமாளிக்க, வண்டலூர் விலங்கியல் பூங்கா, சென்னை பாம்புப் பண்ணை மற்றும் பெசன்ட் நகர் விலங்கு மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து தற்காலிகமாக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து புதிய மருத்துவ பட்டதாரிகளைப் பூங்காவிற்கு அனுப்பவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கிண்டி சிறுவர் பூங்காவில் 400-க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக முழுநேர நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.