‘எங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன்


‘எங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன்
x

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழக மக்களுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான திட்டத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இதில் மக்களின் பங்களிப்பு முழுமையாக இருக்கும். பா.ஜ.க. மக்களுக்கான கட்சி. எங்கள் தேர்தல் அறிக்கையை எல்லா பிரிவினரும் வளர்ச்சி அடையக்கூடிய, பலனடையக்கூடியதாக இருக்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவில், ‘டபுள்’ இன்ஜின் அரசை ‘டப்பா’ இன்ஜின் என்று விமர்சித்திருந்தார். பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் ‘டபுள்’ இன்ஜின் மட்டுமல்ல, மாநகராட்சி தேர்தல்களிலும் வெற்றி பெற்று ‘டிரிபிள்’(triple) இன்ஜினாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. தான் ‘டிரபிள்’(trouble) இன்ஜினாக இருந்து கொண்டிருக்கிறது.

அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புறவு தொழிலாளர்கள், சத்துணவு பணியாளர்கள் என அனைவரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறது என்று முதல்-அமைச்சர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்த நிதி மற்றும் நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் உதவியே இல்லாமல் நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம், உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். உழைப்பதற்காகத் தானே மக்கள் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளே உழைக்கும்போது ஆளுங்கட்சி உழைத்து தானே ஆக வேண்டும்.

சமூக நீதி பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இன்று வரை வேங்கைவயலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பற்றி செல்வப்பெருந்தகை கேட்கமாட்டார், நான் கேட்கிறேன். நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. குற்றவாளியை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை?

பெண்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறீர்கள். மறுபுறம் டாஸ்மாக் வருமானம் 49 ஆயிரம் கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. எங்கிருந்து அந்த பணம் வருகிறது? அக்காவிடம் பணத்தைக் கொடுத்து, அண்ணனிடம் இருந்து டாஸ்மாக்கில் வாங்கிக் கொள்கிறீர்கள்.

தனிநபர் மீது இருக்கும் கடன் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகம் மீண்டு வர வேண்டும் என்றால் தி.மு.க. மீண்டும் வரக் கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது.

த.வெ.க. தலைவர் விஜய்யை டெல்லிக்கு வரவழைத்தது சட்ட ரீதியான நடவடிக்கை தானே தவிர, அவரை கூட்டணிக்கு அழைப்பதற்காக அல்ல. விசில் எங்களுக்கு உடனடியாக தேவை இல்லை. எங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருக்கிறது. அதே சமயம், எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story