தமிழகத்தின் வெற்றித் தலைநகராக திகழும் நம் சென்னை: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

பல்வேறு மொழி, இன, பண்பாடுகளை சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாக சென்னை திகழ்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வெற்றித் தலைநகராக திகழும் நம் சென்னை: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடி வருகிறது.

சென்னை நாள்

இந்நிலையில் சென்னை நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையை போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!

சிறப்பான வளர்ச்சி

வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.

சென்னையை மேலும் உயர்த்துவோம்

சென்னையின் வரலாற்று பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.

வளரட்டும் சென்னைப் பெருநகரம்!

உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com