

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், ஒட்டக்கோவில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைக்கும் விதமாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு மரக்கன்றுகளை நட்டு வைத்து, கனிமவள அறக்கட்டளை நிதியின் மூலமாக ரூ.57.21 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இயற்கை வளங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, . புவியியல் மற்றும் சுரங்க துறையின் இயக்குநர் த.மோகன், அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ந.மிருணாளினி, மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்கண்டவாறு உரையாற்றினார்:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க உலக சுற்றுச்சூழல் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்தினத்தோடு இத்தகைய முன்னெடுப்புகள் நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் மரக்கன்றுகளை வளர்த்து, நல்ல முறையில் பராமரித்து எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டினை நாம் அனைவரும் வழங்க வேண்டும்.
அல்ட்ராடெக் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கனிமவள அறக்கட்டளை சார்பில் உள்ள நிதியினை பயன்படுத்தி இந்த ஊர் மக்களுக்கு தேவையான குடிநீரையும், மருத்துவ தீர்வையும் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அதனையே தமிழ்நாடு முதல்-அமைச்சரும் எதிர் பார்க்கிறார்கள்.
மக்களை பாதுகாப்பதும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் நமது பணியாகும். எனவே, அதனை முழுமையாக உணர்வு பூர்வமாக மேற்கொள்ளவேண்டும் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆசை மற்றும் கனவாகும். அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கையாகும்.
கிராம பொதுமக்களை அழைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதே உண்மையான வளர்ச்சியாகும் என்பது தமிழக அரசின் நம்பிக்கையாகும். குறிப்பாக விவசாயிகள், உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோருக்கான முதல்வராக நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் இருப்பார்கள் என்பதை சொல்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் அதிகளவிலான கனிமவளங்கள் இருக்கின்ற இந்த மாவட்டத்தில் அதிக அளவிலான குடிசை பகுதிகளும், அதிக அளவிலான வீடு இல்லாதவர்களும் உள்ளார்கள். எனது சார்பில் தொழிற்சாலைகளுக்கு ஒரு கோரிக்கை. இந்த மாவட்டத்திலிருந்து நம் நாட்டிற்கு, நம் முன்னேற்றத்திற்கு சிமெண்ட் உற்பத்தி மூலம் பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள்.
அதே நேரத்தில், இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தரமான வீடுகளை கட்டிதர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு மற்றுமொரு முக்கிய கோரிக்கை இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
நாம் இயற்கையை பாதுகாத்தால், இயற்கையே நம்மை பாதுகாக்கும். வளர்ச்சியையும் சுற்றுச்சூழலையும் சமநிலைப்படுத்தி ஒரு வளமான, பாதுகாப்பான தமிழகத்தை நாம் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் செய்து காண்பிப்போம் என்ற உறுதியோடு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு தெரிவித்தார்.
முன்னதாக, கிராம பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், சுரங்க தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார உபகரணங்களையும், பொதுமக்களுக்கு விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கியதுடன், உயிரியல் பல்வகை தன்மை குறித்த புத்தகத்தினையும் வெளியிட்டு, அல்ட்ராடெக் மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்ட உயிரியல் பல்வகைதன்மை நடவடிக்கைகள் குறித்த ஒலி, ஒளி காட்சிகளையும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திலுள்ள நமங்குணம் ஊராட்சியில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும், நக்கம்பாடி ஊராட்சி ஆதிதிராவிடர் தெரு பகுதியில் உள்ள மயான சாலையில் ரூ.19.24 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கல்வெர்ட் மற்றும் தடுப்பு சுவர் மற்றும் மணக்குடையான் கிராமத்தில் ரூ.24.40 இலட்சம் மதிப்பீட்டில் மாராக்குறிச்சி பிரதான சாலையிலிருந்து மயான சாலை வரை 700 மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்ட சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் இயக்குநர் வெ.அருணா, அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி பிரேமி, அரியலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் சுகுணா, ரெட்டிப்பாளையம் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் ஆலையின் தலைவர் கே.கருணாகர ராவ், இதர அரசு அலுவலர்கள், சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.