நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கையில் பட்டத்துடனும் - கண்களில் கனவுகளுடனும் - எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களது திறமைக்கும் - அறிவுக்கும் - ஆற்றலுக்கும் தகுந்த எதிர்கால வாழ்க்கை நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. உங்கள் பெயரோடு இனி சேர இருக்கும் பட்டம் என்பது - இந்த சமூகத்தில் உங்களை அடையாளம் காட்டும் அறிவு அடையாளம். இந்த பட்டத்தோடு உங்களுடைய பட்டப் படிப்பு முடியப் போவதில்லை. அடுத்தடுத்த உயர்வுக்கு இது ஒரு அடித்தளம், அவ்வளவுதான். எந்த மனிதரின் சிந்தனைக்கும் அவரது மரணத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அது போலத்தான் படிப்பும் - இறுதிவரை தொடர வேண்டும்.

பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் - 'வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை' என்று சொல்கிறார்கள். அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.

மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதில் பெறும் வகையில், நான் முதல்வன்என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பட்டம் பெறுவதோடு மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானோராக - சமூகநீதிப் பார்வை கொண்டவர்களாக விளங்கிடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!

காமராசரின் ஆட்சி பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞரின் ஆட்சி கல்லூரிக்கல்வியின் பொற்காலம்; நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்! என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com