

சென்னை,
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு கவர்னர் மாளிகைக்கு நாங்கள் தினமும் செல்லவில்லை.
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம் என்று சொல்கிறீர்களே, அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதை மறந்து விட்டீர்களா முதல்-அமைச்சரே?
2006-ல் அமைந்த தி.மு.க. ஆட்சியைப் பற்றி பதிவு செய்திருக்கிறீர்களே, அந்த சமயத்தில் உங்களைப் போல் எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ.க்களை கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, சோபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டார்கள் போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியாக எங்களின் வெற்றி!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.