

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் 1953-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகவும் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலைச் சார்ந்த சுமார் 2,500 வரிதாரர்கள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர்.
கோவில் வளாகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகையில்: "ஓட்டு என்னும் மூலப்பொருளை கேட்டு வரும் அன்பர்களே! தொழிலதிபர்களே! எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காசி விநாயகர் - ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் வரிதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் ஓட்டு விற்பனைக்கு இல்லை; ஜனநாயகத்திற்கே!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சுப்பையா, கௌரவ தர்மகர்த்தா செம்புலிங்கம், பொருளாளர் சுடலைமணி மற்றும் கௌரவ ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது கோவிலைச் சேர்ந்த 2,500 வரிதாரர்களும் தங்களது விருப்பப்படி ஜனநாயக முறைப்படி மட்டுமே வாக்களிப்பார்கள். எக்காரணம் கொண்டும் வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்.
வாக்கு என்பது ஒரு நாட்டின் மிக முக்கிய மூலப்பொருள். இதைப் பயன்படுத்திதான் கவுன்சிலர் முதல் பிரதமர் வரை அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியலில் நேர்மையானவர்களுக்கும், ஜனநாயகத்திற்கும் வலுசேர்க்கும் வகையில் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கோவில் முன்பு அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பதாகையை வைத்துள்ளோம்.
வாக்கிற்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக, ஒரு ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருவதோடு வைரலாகி வருகிறது.