திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - அண்ணாமலை

தளி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தளி தொகுதி வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகமே அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் நாகேஷ்குமார் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

தளி சட்டமன்ற தொகுதியில் ரவுடி தொல்லைகளை விட, தற்போதைய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரனின் தொல்லை தான் அதிகமாக இருக்கிறது. அவர் மீது இரண்டு கொலை வழக்குகள், நான்கு கொலைமுயற்சி வழக்குகள் உள்ள நிலையில் அவரை தனது கூட்டணி வேட்பாளராக நிறுத்தியிருக்கும் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். இதுமட்டுமின்றி, ரூ.100 கோடி கிரானைட் கொள்ளை வழக்கு இவர் மீது உள்ளது. 1996 ஆம் ஆண்டு ராமன் மற்றும் அவரது சகோதரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் ராமச்சந்திரன். இப்படிப்பட்ட கொலைகார குற்றவாளியை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவது உறுதி.

தமிழக நலனிற்கு எதிராக ஐந்தாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்திருக்கும் திமுகவை எதிர்த்து தமிழக மக்கள் வரவுள்ள தேர்தலில் வாக்களிப்பார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யாத கையாலாகாத ஆட்சியை நாம் விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தளி தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வேட்பாளர் நாகேஷ்குமாருக்கு தாமரை சின்னத்திலும், ஓசூர் தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தளியின் வளர்ச்சிக்கு, மலரட்டும் தாமரை! தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வெல்லட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com