

சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுற்றித் திரிந்து வந்த தெருநாய்களால் அங்கு இருக்கும் மான்களுக்கு ஆபத்து என்றும், தெருநாய்கள் தாக்குவதால் சில மான்கள் இறந்து போனது என்றும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அங்கு சுற்றித் திரியும் நாய்களை ஐ.ஐ.டி. நிர்வாகமே பராமரிக்கும் என்று கூறியது. அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த ஆண்டு கூண்டு அமைத்து 188 நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்ததில் சில நாய்கள் அடுத்தடுத்து செத்தது சந்தேகங்களை கிளப்பியது. அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 188 நாய்களில் 2 நாய்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், 56 நாய்கள் இறந்துவிட்டதாகவும், 29 நாய்கள் தத்தெடுத்து வளர்க்க வழங்கிவிட்டதாகவும், 14 நாய்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீதமுள்ள 87 தெருநாய்களில் 3 நாய்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அதை சிகிச்சைக்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அவற்றில் 2 நாய்களின் உடல்நிலை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.