

சென்னை,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைக்குச் சென்ற பின்னர், 2017-ம் ஆண்டு நவம்பரில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்தபோது, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள பல சொத்துகளை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. காண்டிராக்டர் ஒருவருக்கு ரூ.237 கோடியை அவர் கடனாக கொடுத்ததும் தெரியவந்தது.
இதுபற்றி சசிகலாவிடம் நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சசிகலா கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சொத்துகளை வாங்கவும், கடன் அளிக்கவும் பயன்படுத்தப்பட்ட பணம், கணக்கில் வராதவை என்று ஏன் அறிவிக்கக்கூடாது? என்று அதில் விளக்கம் கோரப்பட்டது. இதற்கு ஆடிட்டர் மூலம் சசிகலா விளக்கம் அளித்திருந்தார்.
அதில், மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்து சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் அளித்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார். மேலும், முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், தானும் கோடநாடு எஸ்டேட் உள்பட பல சொத்துகளுக்கு பங்குதாரராக இருந்தநிலையில், அவரது மறைவுக்கு பிறகு தானே அனைத்து சொத்துகளுக்கும் உரிமையாளர் ஆகியிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சசிகலா மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கியதற்கான கூடுதல் ஆதாரம் இருப்பதாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்களை மேற்கோள்காட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2016-ம் ஆண்டு 8-ந் தேதி பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டாலும், மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை 30-ந் தேதிக்குள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். பல தொழில் அதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் சொத்துகளை அதிக விலைக்கு விற்று அந்த பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொண்டனர். இதற்கான வர்த்தக பரிமாற்றத்தை போலியாக காட்டியுள்ளனர் என்றும் தெரிந்தது.
2017-ம் ஆண்டு நவம்பரில் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், அண்ணி இளவரசி ஆகியோரின் மகன் விவேக்கின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழில் கைப்பட எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்தன.
அந்த கடிதங்கள் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 2 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர், தனது வீட்டு காவலாளியிடம் சீலிடப்பட்ட கவர் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றதாக கூறியிருக்கிறார். அந்த கவரை காவலாளி தன்னிடம் தந்ததாக விவேக் கூறியிருக்கிறார்.
அந்த காவலாளி யார் என்று விவேக்கிடம் அவர்கள் விசாரித்தனர். ஆனால் தன் வீட்டில் 2 காவலாளிகள் இருப்பதால் அவர்களில் யார் அந்த கவரை கொடுத்தார் என்பது தெரியவில்லை என்றும், அவர் கொடுத்த தேதியும் மறந்துவிட்டது என்றும் விவேக் கூறியிருக்கிறார். அந்த கடிதம் பற்றி சசிகலாவிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் விவேக் பதில் அளித்திருக்கிறார்.
ஆனாலும் மேற்கொண்டு நடந்த விசாரணையில், அந்த கடிதம் பெங்களூரு சிறையில் இருந்தபடி சசிகலாவால் எழுதப்பட்டதுதான் என்றும், 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அதை அவர் எழுதியிருக்கலாம் என்றும் தெரிந்துகொண்டோம். அந்த கையெழுத்து பற்றி சசிகலாவின் சட்ட ஆலோசகர் எஸ்.செந்தில் எழுத்து மூலம் உறுதி அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துகளை பட்டியலிட்டு அதை விவேக்கிற்கு தெரியப்படுத்துவதற்காக சசிகலா கடிதம் எழுதியிருந்ததாக வக்கீல் செந்தில் விசாரணை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். மேலும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணமடைவதற்கு (2016-ம் ஆண்டு டிசம்பர் 5) சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் உச்சரித்து எழுதச்செய்த குறிப்பில் அதுபற்றிய கூடுதல் விவரங்கள் இருப்பதாக செந்தில், விசாரணை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.
மேலும், 2017-ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் விவேக் தனது வீட்டுக்கு என்னை அழைத்து அந்த கடிதத்தை காண்பித்தார். 2016-ம் ஆண்டு டிசம்பரில் சசிகலா என்னிடம் கொடுத்த கவரை தன்னிடம் ஒப்படைக்கும்படியும் விவேக் கேட்டுக்கொண்டார். சிறையில் இருந்து சசிகலா பரோலில் வரவிருப்பதாகவும் என்னிடம் விவேக் கூறினார்.
மேலும், அந்த கவரை தன்னிடமோ அல்லது பரோலில் வரும்போது சசிகலாவிடமோ நான் கொடுக்கலாம் என்றும் விவேக் தெரிவித்தார். நான் 2017-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி சசிகலாவை தனியாக சந்தித்தபோது அந்த கவரை அவரிடம் கொடுத்தேன் என்றும் செந்தில் கூறியிருக்கிறார்.
இவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலங்களை பெற்ற பிறகுதான் சசிகலாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதில், பணமதிப்பு இழப்பு இருந்த காலகட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை நீங்கள் வாங்கியிருப்பது பல்வேறு நிலையில் எடுக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.