

சென்னை,
சென்னையில் மேம்பால கட்டுமானப் பணி காரணமாக வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் மற்றும் வியாசர்பாடியில் இருந்து கணேசபுரம், புளியந்தோப்பு, பட்டாளம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் சந்திப்பில் மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்படும். வலதுபுறமாகச் செல் லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை, ஏ.ஏ.சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, முரசொலிமாறன் பாலம், ஜமாலியா வழியாகச் செல்ல வேண்டும். இடதுபுறமாக செல்லும் வாகனங்கள் கணேசபுரம் பிரதான சாலை, சுந்தரம் நகர் பிரதான சாலை, வியாசர்பாடி ரெயில்வே சுரங்கப்பாதை, பி.பி. டாப் வழியாக தங்களது இலக்கை அடையலாம்.
அதேபோல், பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளிலிருந்து கொடுங்கையூர், வியாசர்பாடி நோக்கிச் செல்லும் வாக னங்கள் ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம், மேட்டுப் பாளையம் சந்திப்பு, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா, முரசொலிமாறன் பாலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி போக்குவரத்து போலீசாரின் வழிகாட்டுதலுக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.