ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது
Published on

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், குடும்பத்துடன் வசிக்கிறார். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடன்பிறந்த சகோதரிகளான இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது நகைகள் மற்றும் பொருட்கள் திருடியதை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று முதலில் போலீசார் கூறினார்கள்.


இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

திருட்டுப்போன நகைகளும் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறியதால், இருவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com