கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் குடோனுக்கு அனுப்பி வைப்பு


கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் குடோனுக்கு அனுப்பி வைப்பு
x

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள காணை, கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்படாததாலும், குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் பயிரிட்டவர்களிடம் சிட்டா அடங்கல் கொடுத்தும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் அவை அங்கிருந்து நகர்வு செய்யப்படாமல் தேக்கமடைந்தன.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு பெய்த பலத்த மழையினால் காணை, கல்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அந்த மூட்டைகளில் இருந்த நெல்லை காய வைத்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் அடையாதவாறு உடனுக்குடன் நகர்வு செய்யும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக மேற்கண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நகர்வு செய்யும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் காணை, கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் நேற்று வாகனங்களில் ஏற்றி விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மூட்டைகளுடன், மழையில் சேதமடைந்த நெல்லை காயவைத்து உலர்த்தியிருந்த நிலையில் அதனையும் மூட்டைகளில் பிடித்து நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மழையினால் அதிகளவில் சேதமடைந்த நெல்லை காய வைத்து உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவை நன்கு காய்ந்த பிறகு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story