

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் டிசம்பர் & ஜனவரி மாதங்களில் விதைத்தோ, நடவு நட்டோ ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பிந்தைய இந்தக் காலம் நவரைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. நவரைப் பருவ அறுவடை கடந்த 10 நாள்களாக தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒத்திவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் பெருமளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தண்டராம்பட்டு, மலமஞ்சனூர் புதூர், கரிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால் ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடங்கின்றன. இந்தப் பகுதியிலும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
காஞ்சிபுரம் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து வட மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததுதான். போதிய சரக்குந்துகள் இல்லாததால்தான் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று கூறும் உணவுத்துறை அதிகாரிகள், இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? உழவர்களுக்கு எப்போது விடியும்? என்பதைக் கூற மறுக்கின்றனர்.
வட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததும், அதனால் கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இன்றி, நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதும் இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தமிழக அரசின் நுகர்பொருள் வாரியம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.
தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. இந்த தனியார் அமைப்பின் கட்டமைப்புகளை வைத்தே நிலைமையை சமாளித்து வரும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், நெருக்கடியான காலக் கட்டங்களில் வட மாவட்ட உழவர்களை அம்போவென கைவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.800 கோடிக்கும் கூடுதலாக உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்ற பிறகும் உழவர்களிடம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் நல அமைப்புகளும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்துதான் அந்தத் தொகையை உழவர்களுக்கு தமிழக அரசு பெற்றுக் கொடுத்தது. அப்போதே வட மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை இனியும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், அதே அமைப்பையே நெல் கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை கண்ணீர் சிந்தும் நிலைக்கு எந்த அரசும் அழைத்துச் செல்லக் கூடாது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தமிழக அரசு போக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் இணையத்திற்கு அளிக்கப்படுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.