நீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா-தாளடி சாகுபடி

நீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா-தாளடி சாகுபடி
Published on

நீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா-தாளடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு முன் கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக ஆறு, குளங்களில் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாவித்திரி ரக நெல்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம், பச்சைகுளம், தேவங்குடி, அரிச்சபுரம், வெள்ளக்குடி, சித்தாம்பூர், கீழாளவந்தச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சாகுபடி செலவு

நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை கைகொடுத்து வருகிறது. நீடாமங்கலம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவத்தில் 1009 சாவித்திரி ரக நெல்லை சாகுபடி செய்து உள்ளனர்.

தற்போது பரவலாக பெய்து வரும் மழை, வயலுக்கு உரம் தெளிப்பதுபோல் இருப்பதாகவும், இதனால் சாகுபடி செலவு குறையும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

அறுவடை எப்போது?

நீடாமங்கலம் பகுதியில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வயல் வெளி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. ஒரு சில இடங்களில் நெல் பழம், இலை கருகல் நோய், எலி வெட்டுதல், புகையான் போன்றவற்றின் தாக்கம் காணப்படுவதால், விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ற மருந்துகளை வாங்கி தெளித்து, அதிக மகசூல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பகுதியில் நெல் அறுவடை அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதிக்கு மேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com