வளவம்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வளவம்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
வளவம்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

ஆதனக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லுக்காரன்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி, சொக்கநாதப்பட்டி, உரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்போது நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை எந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்தனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை ஆதனக்கோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றும், விற்பனைக்காக குவியல்களாக கொட்டி தார்ப்பாய் போட்டு மூடியும், தங்களது வீடுகளில் சேமித்தும் வைத்திருந்தனர். நீண்ட நாட்களாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருந்ததால் தாங்கள் விளைய வைத்த நெல் மணிகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 5-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்தனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய திடலில் குவியல்களாக சேமித்து வைத்த நெல் மணிகளை எடை போட்டு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

60 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com