

கூடலூர்,
முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலியானார். யானைக்கு உணவு வழங்கிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மசினி யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய 2 இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளது. இங்கு 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பணியில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வளர்ப்பு யானைகளுக்கு தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் கொண்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு முதுமலை கார்குடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் பணியில் பாகன்கள் ஈடுபட்டனர். அப்போது 16 வயதான மசினி என்று அழைக்கப்படும் வளர்ப்பு யானைக்கு, அதன் பாகன் பாலன் (வயது 54) என்பவர் உணவு வழங்கி கொண்டிருந்தார்.
பாகன் பலி
பின்னர் திடீரென மசினி யானை பாலனை தாக்கியது. அப்போது அவர் யானையிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், அது முடியவில்லை. அதற்குள் அந்த யானை மீண்டும் பாலனை தாக்கி மிதித்தது. இதை பார்த்த சக பாகன்கள் ஓடி வந்து, மசினி யானையை சத்தம் போட்டு கட்டுப்படுத்தினர்.
இதனிடையே படுகாயம் அடைந்த பாகன் பாலனை, மற்ற பாகன்கள் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே பாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கண்காணிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மசினகுடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மசினி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆதிவாசி மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
--------
(பாக்ஸ்)குழந்தை போல் வளர்ந்த மசினி யானை
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு சிறந்த உதாரணமாக யானைகள் உள்ளது. சாதுவான குணம் கொண்ட யானைகள், சூழலில் இருந்து வேறுபடும்போது ஆக்ரோஷம் அடைகின்றன. கடந்த 2006-ம் ஆண்டு முதுமலை கார்குடி பகுதியில் ஆதிவாசி மக்கள் வழிபடும் மசினியம்மன் கோவில் அருகே பிறந்து 15 நாட்களே ஆன குட்டி யானை தாயை பிரிந்து தவித்து கொண்டிருந்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு கோவில் அருகே பிடித்ததால் மசினி என பெயரிட்டு அழைத்தனர். அன்று முதல் முதுமலை முகாமில் செல்ல பிள்ளையாக வளர்க்கப்பட்டது. முகாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சின்ன குழந்தை போல் ஓடுவது, சுட்டித்தனம் செய்வது என அதன் சேட்டைகள் அனைவரையும் ஈர்த்து வந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தெப்பக்காடு முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பு மணி அடிப்பது, கோவிலை வலம் வருவது என காண்போரை உச்சி முகர வைத்தது.
------
(பாக்ஸ்)எளிதில் குணநலன்களை கணிக்க முடியாது
மசினி யானை பாகனை கொன்றது குறித்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் கூறியதாவது:-
தாய் யானையின் அரவணைப்பில் இல்லாமல் வளர்ந்தது மசினி யானை. நன்கு பராமரிப்புக்கு பிறகு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சூழல், மனிதர்கள் வாழும் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்ததால் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பாகனை தாக்கி கொன்று இருக்கலாம்,
யானைகளுக்கு இடையே குண நலன்களில் வேறுபாடுகள் உள்ளது. அதனால் தாக்கும் குணம் மாறுமா என உறுதியாக கூற முடியாது. அந்த வகையில் மசினி யானை 2-வது முறையும் பாகனை தாக்கி இருக்கிறது. எந்த நேரத்தில் தாக்கும் என தெரியாது. பாகனை கொன்ற சிறிது நேரம் கழித்து அதன் இயல்பான குணத்துக்கு மசினி யானை மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
----------
(பாக்ஸ்)5 ஆண்டுகளுக்கு முன்பு
சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற மசினி யானை
2015-ம் ஆண்டு முதுமலை முகாமில் இருந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மசினி யானை அனுப்பி வைக்கப்பட்டது. பாகன் கஜேந்திரன் பராமரித்து வந்தார். முதுமலை வனப்பகுதியை விட்டு பிரித்ததால் என்னவோ, மசினி யானையின் குழந்தைத்தனமான விளையாட்டுகள் மறைந்து மூர்க்கத்தனமான குணம் உண்டானது. செல்லப்பிள்ளையாக வளர்ந்த மசினி மனிதர்கள் வாழக்கூடிய சூழலுக்குள் தள்ளப்பட்டதால் அதன் போக்கும் திசை மாறியது.
இதனால் அடங்காப்பிள்ளையாக உருமாறிய நிலையில், அடிக்கடி சினம் கொண்டது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி வழக்கம்போல பாகன் கஜேந்திரன் மசினி யானையை கோவில் வளாகத்திற்குள் அழைத்து வந்தார். அந்த சமயம் யானைக்கு திடீரென மதம் பிடித்து அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடியது. அத்துடன் பாகனையும் தூக்கி வீசியது. இதில் காயம் அடைந்த பாகன் யானையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், பலிக்கவில்லை. மாறாக யானை பாகனை காலால் மிதித்து கொன்றது.
மேலும் யானையை பார்த்து ஓட்டம்பிடித்த போது, கீழே விழுந்ததில் 8 பக்தர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் யானை கட்டுப்பட மறுத்து இறந்து கிடந்த பாகன் அருகிலேயே நின்று கொண்டு இருந்தது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு யானையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. மசினி யானையை 2019-ம் ஆண்டு மீண்டும் முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து முதுமலைக்கு மசினி யானை கொண்டு வரப்பட்டது. ஆனால் சாந்த குணத்துக்கு மசினி மாறி இருக்கும் என நம்பப்பட்டது. இந்தநிலையில் நேற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு பாகன் பாலனை தாக்கி கொன்று விட்டது.
-----