பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெயிண்டர் வெட்டிக்கொலை

போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெயிண்டர் வெட்டிக்கொலை
Published on

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கொடியரசன் (வயது 25). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து இருந்தார். தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மில்லில் தங்கி, பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 11-ந்தேதி விடுமுறையில் கிருஷ்ணன் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம், அய்யங்கோட்டைக்கு வந்த அ.புதூர் பகுதியை சேர்ந்த தனபாண்டி என்பவர் பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கிருஷ்ணன், அங்கு சென்று தனபாண்டியனை தட்டிக் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கிருஷ்ணன் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

இதற்கிடையே கிருஷ்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த தனபாண்டி நேற்று முன்தினம் இரவு தனது தம்பி நாகபாண்டி (23), நண்பர் சந்தீப் சஞ்சய் மற்றும் உறவினர்கள் சிலருடன் அய்யங்கோட்டைக்கு வந்தார். அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனை எழுப்பினர். பின்னர் அங்குள்ள கோவில் பகுதிக்கு கிருஷ்ணனை அழைத்து சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தனபாண்டி, நாகபாண்டி, சந்தீப் சஞ்சய் ஆகியோர் கிருஷ்ணனை தாக்கியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கிருஷ்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபாண்டி, நாகபாண்டி, சந்தீப் சஞ்சய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com