

தூத்துக்குடி,
கோவில்பட்டியில் செல்போன் திருடுபோனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 3 பேரால் தாக்கப்பட்ட பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பான கொலை வழக்கில் போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த சீனி என்பவரது மகன் பெருமாள் (வயது 31). பெயிண்டரான இவரது செல்போன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுப்பிரமணியபுரம் கல்கிடங்கு அருகே உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பெருமாள் நடந்து சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த கருப்பசாமி(20), ரத்தினசாமி(20) மற்றும் பாலச்சந்தர்(23) ஆகியோரிடம் தனது செல்போன் திருடுபோனது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து பெருமாளை கைகளால் தாக்கியதுடன், கல்லால் அவரது பின்தலையிலும் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பெருமாளுக்கு தலையில் ரத்தக்காயமும், முகத்தில் வீக்கமும் ஏற்பட்டது. அங்கே அருகில் இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால் பெருமாள் சம்பவம் நடந்த இடத்திலேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் அப்பகுதியிலிருந்த மக்கள் காயத்துடன் இருந்த பெருமாளை மீட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே பெருமாள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி, ரத்தினசாமி, பாலச்சந்தர் ஆகிய 3 பேரையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் கைது செய்து, கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், ஏற்கனவே பதிவு செய்திருந்த தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் வழக்கை, கொலை வழக்காக மாற்றினர். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.