

பாலக்கோடு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எண்டபட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). பாலக்கோட்டில் உள்ள சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ரோஷிணி (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர். கடந்த 2 மாதங்களாக ரோஷிணி வீட்டிலேயே நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ராமகிருஷ்ணன் மற்றும் இவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் ரோஷிணி புடவையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி ரோஷிணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீட் மறுதேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிலையில் ரோஷிணி திடீரென தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. நீட் மறு தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.